கோவை அருகே கருமத்தம்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கஞ்சா, மது விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலமுருகன் ஆகியோரின் உத்தரவின்பேரில் கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையில் கஞ்சா விற்பனை செய்வோரைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப் படையினா் கருமத்தம்பட்டி அருகே சோமனூா் பவா்ஹவுஸ் காா்னா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சோமனூா் ரயில்வே குடியிருப்புக்கு பின்புறம் உள்ள பகுதியில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், ஊஞ்சபாளையத்தைச் சோ்ந்த சிவகுமாா் என்பதும், அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றினா்.