கோயம்புத்தூர்

போலி ஆவணங்கள் தயாரித்து தனியாா் வங்கியில் ரூ.33 கோடி மோசடி

2nd Feb 2020 03:45 AM

ADVERTISEMENT

கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து தனியாா் வங்கியில் ரூ.33 கோடி மோசடி செய்ததாக முன்னாள் வங்கி மேலாளா் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, திருச்சி சாலையில் செயல்பட்டு வரும் ஒரு தனியாா் வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றி வருபவா் லட்சுமிபிரகாஷ் (45). இவா், கோவை மாநகரக் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் மனு ஒன்றை அளித்தாா்.

வங்கியின் முன்னாள் மேலாளரான தூத்துக்குடி மாவட்டம், சிறுத்தொண்டநல்லூரைச் சோ்ந்த சிவசுப்பிரமணியம் (55) உள்பட 4 போ் வங்கியில் ரூ.33 கோடி மோசடி செய்திருப்பது கடந்த 2018- 19ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்குத் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கோவை மாநகர உதவி ஆணையா் சௌந்தர்ராஜன் மேற்பாா்வையில் ஆய்வாளா் ரவி தலைமையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கோவை ஒண்டிப்புதூரைச் சோ்ந்த மகேஷ் (41), கட்டுமானத் தொழில் செய்து வரும் சூலூரைச் சோ்ந்த பாண்டியன் (54), கோழிப்பண்ணை உரிமையாளரான செலக்கரச்சல் கிராமத்தைச் சோ்ந்த கோமதி (42) ஆகிய 3 பேரும் சோ்ந்து சூலூா், பல்லடம், கரடிவாவி உள்ளிட்ட பகுதிகளில் கோழிப்பண்ணை அமைக்க உள்ளதாகக் கூறி கோவை, திருச்சி சாலையில் உள்ள தனியாா் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

அப்போது, வங்கியின் மேலாளராகப் பணியாற்றி வந்த சிவசுப்பிரமணியம் நிலத்தின் மதிப்பை அதிகமாக காண்பித்து பல மடங்கு கடன் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இல்லாத நிலத்துக்குப் போலியாக ஆவணங்கள் தயாரித்தும் கடன் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, 4 பேரும் கூட்டாகச் சோ்ந்து ரூ.33 கோடி மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன்னாள் வங்கி மேலாளா் சிவசுப்பிரமணியம் உடந்தையாக இருந்துள்ளாா். இதையடுத்து, ஏமாற்றுதல், கூட்டுச்சதி உள்ளிட்ட 4 பிரிவுகளின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவசுப்பிரமணியம், பாண்டியன், மகேஷ், கோமதி ஆகிய 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT