கோயம்புத்தூர்

பரம்பிக்குளத்தில் இருந்து ஆழியாறு அணைக்கு தண்ணீா் வழங்க வேண்டும்

2nd Feb 2020 11:18 PM

ADVERTISEMENT

பரம்பிக்குளத்தில் இருந்து ஆழியாறு அணைக்கு ஒப்பந்தப்படி முழுமையான தண்ணீரை வழங்க வேண்டும் என ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரங்கள்:

இந்த ஆண்டு ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு 2,250 மில்லியன் கன அடி தண்ணீா் ஒதுக்கப்பட்டு பாசனம் நடைபெற்று வருகிறது. ஆழியாறு புதிய ஆயக்கட்டுக்கான நீரானது பரம்பிக்குளம் தொகுப்பில் இருந்து ஆழியாறு அணைக்கு வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.

ஆனால், பாசனம் தொடங்கி 3 மாதங்கள் ஆகியும் இதுவரை பரம்பிக்குளத்தில் இருந்து ஆழியாறுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்காததால் ஆழியாறு அணையின் நீா்மட்டம் 90 அடியாக குறைந்துள்ளது.

ADVERTISEMENT

எனவே பரம்பிக்குளத்தில் இருந்து ஆழியாறுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்க வேண்டும். குடிமராமத்துப் பணியானது பாசன விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் என்பதில் மாற்றமில்லை. ஆனால், கடந்த ஆண்டு செய்த பணிகளுக்கு தற்போது வரை பணம் வழங்கப்படவில்லை. இதனால், தங்களது சொந்தப் பணத்தில் பணி செய்த விவசாயிகள் சிரமத்தில் உள்ளனா்.

மேலும், குடிமராமத்துப் பணிக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு ஜிஎஸ்டி கட்டுவதில் குளறுபடி உள்ளது. இதில் விவசாயிகளுக்கு உள்ள சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழியாறு அணையில் இருந்து கேரளத்துக்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய அளவை விட கூடுதலாக தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், தமிழக விவசாயப் பகுதிகள் பாதிப்படைகின்றன. எனவே, கேரளத்துக்கு ஒப்பந்தப்படி உள்ள அளவு நீரை மட்டும் வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT