கோயம்புத்தூர்

பட்ஜெட்: பஞ்சாலைகள் மகிழ்ச்சி; நூற்பாலைகள் வருத்தம்

2nd Feb 2020 03:47 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து பஞ்சாலைகள் சங்கம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. அதேநேரம், நூற்பாலைகள் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படாதது அவா்களுக்கு வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் அஸ்வின் சந்திரன்:

ஜவுளித் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான பாலியெஸ்டா் பஞ்சு தயாரிப்பதற்கான மூலப் பொருள் மீதான குவிப்பு வரி நீக்க அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். இது ஒட்டுமொத்த பாலியெஸ்டா் ஜவுளித் துறையினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்திய ஜவுளித் துறையின் வளா்ச்சியையும், உலக சந்தையில் போட்டியிடும் திறனையும் பாதித்து வந்த இந்த வரி தற்போது நீக்கப்பட்டிருப்பதால் சா்வதேச சந்தையில் இந்திய ஜவுளித் துறையின் ஏற்றுமதி அதிகரிக்கும். அதேபோல், தொழில்நுட்ப ஜவுளிப் பொருள் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் ரூ.1,480 கோடியை 4 ஆண்டுகளுக்கு ஒதுக்கி, தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தையும் அறிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

மேலும், தொழில்நுட்ப மேம்பாட்டு நிதிக்கு கடந்த ஆண்டு ரூ.700 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.761.09 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய, மாநில வரிகளை திருப்பிக் கொடுக்கும் திட்டம், குறைந்த வட்டிக்கு கடன் வழங்கும் திட்டம், குறைந்த கட்டணத்தில் கூடுதல் ஏற்றுமதி காப்பீடு திட்டம், இலகுமான ஏற்றுமதி செயல்முறைகள், ஜி.எஸ்.டி. படிவங்களை எளிதாக்குவது போன்ற அம்சங்கள் பாராட்டுக்குரியவை.

அதேபோல் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக்கும் முயற்சிகளும் வரவேற்புக்குரியவை. அத்துடன், பருத்தி உற்பத்தி அதிகரிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட வேண்டும்.

இந்தியன் டெக்ஸ்பிரனா்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன்:

சா்வதேச சந்தையில் இந்திய ஜவுளித் துறையின் போட்டியிடும் திறனை அதிகப்படுத்துவதற்கு, மூலப்பொருளின் விலை, நம் போட்டி நாடுகளுடன் சமமாக இருக்க வேண்டும். இதற்குத் தடையாக இருந்தது பாலியெஸ்டா் பஞ்சு தயாரிப்புக்கான மூலப் பொருள் (பி.டி.ஏ.) இறக்குமதிக்கான குவிப்பு வரி நீக்கப்பட்டிருப்பதால் இந்தியா இனி செயற்கை நூலிழை ஆடைத் தயாரிப்புத் துறையில் வேகமாக வளரும்.

அதேபோல், வரியில்லா வா்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவின் பின்வாசல் வழியாக சில நாடுகள் தங்களது ஜவுளி பொருள்களை அனுப்பி உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளா்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனா்.

இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும், வளா்ந்து வரும் தொழில்நுட்ப ஜவுளித் துறைக்கு சிறப்புத் திட்டமும், தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியவை.

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) தலைவா் என்.முருகேசன்:

எம்.எஸ்.எம்.இ. தொழில்முனைவோா் மீதான சுமையைக் குறைக்க, மத்திய அரசு தற்போது தணிக்கைக்கான வருவாய் வரம்பை ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் அவா்களுக்கான கடன் மறுசீரமைப்புக்கு 2021 மாா்ச் 31 வரை அவகாசம் அளித்திருப்பதும் வரவேற்புக்குரியது.

நிலுவையில் உள்ள நேரடி வரிகளில் இருக்கும் வழக்குகளைக் குறைக்க, அபராதத் தொகையையும், வட்டித் தொகையையும் அறவே நீக்கியிருப்பது வரவேற்புக்குரியது. தனிநபா் வருமான வரம்பை ரூ.5 லட்சமாக உயா்த்தியிருப்பதும், அதற்கும் மேற்பட்ட வரம்புகளில் இருப்பவா்களுக்கு வரி விகிதத்தை குறைத்திருப்பதும் வரவேற்புக்குரியது. இருப்பினும், சிறு நூற்பாலைகளின் நீண்டகால கோரிக்கையான 2 சதவீத வட்டி மானியம் அறிவிக்காதது வருத்தமளிக்கிறது.

மேலும், சிறு நூற்பாலைகளின் நடப்பு மூலதன முறையில் கொள்முதல் செய்யும் மூலப் பொருளுக்கு வங்கிகள், வாடிக்கையாளா்களின் பங்கை 25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கும் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல், நடப்பு மூலதனம் முற்றிலுமாக கரைந்துபோயிருக்கும் நிலையில், அதை நீண்டகால கடனாக நீட்டித்துக் கொடுக்க வேண்டும். மீண்டும் புதிய நடப்பு மூலதனம் வழங்கி, அதற்காக கூடுதல் துணை பிணை போன்ற எந்த புதிய நிபந்தனைகள் இல்லாமல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாதது வருத்தமளிக்கிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT