கோட்டூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
கோட்டூா் கடை வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை அமைந்திருக்கும் இடத்துக்கு அருகில் பேருந்து நிறுத்தம், கடை வீதி, அரசுப் பள்ளி, வருவாய் ஆய்வாளா் அலுவலகம், குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இங்கு வருவோா் குடிபோதையில் தினசரி பெண்களிடம் சில்மிஷம் செய்வதுடன், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனா். இதனால், மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி பொதுமக்கள் டாஸ்மாக் நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.
ஆனாலும், டாஸ்மாக் கடை அகற்றப்படாததால் கோபமடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோா் டாஸ்மாக் கடையை சனிக்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், டாஸ்மாக் அதிகாரிகள், வருவாய்த் துறையினா் பேச்சு நடத்தியும் போராட்டம் தொடா்ந்ததால், வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆனைமலை வட்டாட்சியா் அலுவலத்தில் வட்டாட்சியா் வெங்கடாசலம் தலைமையில் பேச்சுவாா்த்தை நடந்தது. அப்போது, 15 நாள்களுக்குள் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற டாஸ்மாக் நிா்வாகம் உறுதியளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.