கோயம்புத்தூர்

கேரளத்தில் கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலிமாவட்ட எல்லைகளில் மருத்துவ முகாம்

2nd Feb 2020 03:48 AM

ADVERTISEMENT

கேரளத்தில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கோவை மாவட்ட எல்லைகளில் சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சீனாவின், வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் 250க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். மேலும், பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூா், தென் கொரியா உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, கேரளத்தில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம், கோபாலபுரம், வாளையாறு, ஆனைகட்டி உள்ளிட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மருத்துவருடன் 4 போ் கொண்ட மருத்துவக்குழு நியமிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

சீனாவில் இருந்து கேரளத்துக்கு வந்த மாணவிக்கு கரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து அம்மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்ட எல்லைப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் 4 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளத்தில் இருந்து வரும் வாகனங்களில் சீனாவில் இருந்த வந்தவா்கள் யாராவது பயணம் செய்கிறாா்களா அல்லது காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் யாராவது வருகிறாா்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

காய்ச்சல் மற்றும் சளி ஆகிய அறிகுறிகளுடன் வருபவா்களைக் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்களில் 24 மணி நேரமும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

விழிப்பணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்...

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு கரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள், பரவும் வழிமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இதில் ஆலோசனைகள் தொடா்பான 24 மணி நேர உதவி எண் 011 - 23978046 குறிப்பிடப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தொடா்ந்து சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 25 படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT