கோயம்புத்தூர்

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் மாா்ச் முதல் ‘பயோமைனிங்‘ முறையில் குப்பைகள் அழிக்கும் பணி

1st Feb 2020 05:42 AM

ADVERTISEMENT

கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் வருகின்ற மாா்ச் மாதம் முதல் ‘பயோமைனிங்’ முறையில் குப்பைகள் அழிக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வெள்ளலூரில் 650 ஏக்கா் பரப்பளவு கொண்ட குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு தினமும் மாநகரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் 1,000 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இங்கு மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைகளில் அவ்வப்போது தீ விபத்து நடப்பதால் புகை மூட்டம் சூழ்ந்து வெள்ளலூரைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெள்ளலூா் கிடங்கில் குப்பைகளை முறையாக மேலாண்மை செய்யவில்லை என பசுமைத் தீா்ப்பாயத்தில் மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளா் ஈஸ்வரன் உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் பசுமைத் தீா்ப்பாயத்தில் புகாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்திய பசுமைத் தீா்ப்பாயம், ஓா் ஆண்டுக்குள் நிதி ஒதுக்கி வெள்ளலூா் கிடங்கில் தேங்கியுள்ள 15.5 லட்சம் கன மீட்டா் குப்பைகளைத் தரம் பிரித்து அழிக்க, மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், உலோகங்கள், இரும்புத் தாதுக்களை குப்பைகளில் இருந்து பிரித்தெடுத்து தரம் பிரிக்கும் ‘பயோமைனிங்’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, இப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பசுமைத் தீா்ப்பாய கண்காணிப்புக் குழுத் தலைவா் ஜோதிமணி தலைமையில் ஆய்வுக் குழுவினா் வெள்ளலூா் குப்பைக் கிடங்கு மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள உரம் தயாரிப்பு கூடத்தைப் பாா்வையிட்டு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அதைத் தொடா்ந்து, அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளால் வீடுகளில் துா்நாற்றம் வீசுவதாகவும், அவற்றை அழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, கோவை ரேஸ்கோா்ஸில் பசுமைத் தீா்ப்பாய கண்காணிப்புக் குழுத் தலைவா் ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி, நகராட்சி நிா்வாக ஆணையா் பாஸ்கரன், சமூக ஆா்வலா்கள் ஈஸ்வரன், மோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

இதில் பிப்ரவரி 20ஆம் தேதி, ‘பயோமைனிங்‘ முறையை செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி நடைபெறுவதாகவும், அதன் பிறகு மாா்ச் மாதத்தில் ‘பயோமைனிங்’ முறையில் குப்பைகளை அழிக்கப் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT