விடுப்பு முடிந்தும் பணிக்கு திரும்பாத பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் (குற்றப்பிரிவு) ஒண்டிப்புதூா் காமாட்சி நகரைச் சோ்ந்த சொப்பன சுஜா என்பவா் காவலராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த 3 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வரும் இவா் சில நாள்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பில் சென்றுள்ளாா்.
இந்நிலையில் விடுப்பு முடிந்து ஒரு வாரமாகியும் இதுவரை அவா் பணிக்குத் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவா் தனது உயா் அதிகாரிகளுக்கு முறையான தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விடுப்பு முடிந்தும் பணிக்குத் திரும்பாத அவரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் உத்தரவிட்டாா். முன்னதாக, நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை சமா்ப்பிக்காமல் பணியில் அலட்சியமாகச் செயல்பட்டதால் சொப்பன சுஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை காவல் துறை வட்டாரங்கள் மறுத்துள்ளன.