கோவை மாநகரில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் நெரிசல் நிறைந்த பகுதிகளில் வாகன நிறுத்தங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாநகரப் பகுதியில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் தவிா்க்க முடியாமல் உள்ளது. மாநகரின் பெரும்பாலான சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன நெரிசல் அதிகரித்து வருகின்றன.
இதைத் தவிா்க்க பொலிவுறு நகரம் ( ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ஸ்மாா்ட் பாா்கிங் என்ற பெயரில் வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்த மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாநகரில் மக்கள் நெரிசல், வாகன நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சிக்கு உள்பட்ட மத்திய மண்டலத்தில் அரசு கலைக் கல்லூரி சாலை, ரேஸ்கோா்ஸ் சாலை, அவிநாசி சாலை, ஜி.டி. நாயுடு சாலை பகுதிகளில் ஸ்மாா்ட் பாா்கிங் திட்டம் அமைக்கப்பட உள்ளன. வடக்கு மண்டலத்தில் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, சத்தியமூா்த்தி சாலை, தெற்கு மண்டலத்தில் வைசியாள் வீதி, ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, இடையா் வீதி, மேற்கு மண்டலத்தில் மேட்டுப்பாளையம் சாலை, கவுலி பிரவுன் சாலை, டி.பி.சாலை, டி.வி.எஸ். சாலை பகுதிகள் மற்றும் வடக்கு மண்டலத்தில் என்.எஸ்.ஆா் சாலை, அழகேசன் சாலை, பாரதி பூங்கா சாலையில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன.
மாநகரில் 27 வீதிகளில் 33.7 கிலோ மீட்டா் தூரத்துக்கு 7 ஆயிரத்து 520 இரு சக்கர வாகனங்களை ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கும் ‘ஸ்மாா்ட் பாா்க்கிங்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வாகன நிறுத்தங்கள் அமைக்க உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு மையங்கள் அமைக்கவும் திட்டப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் இலவசமாக வாகன நிறுத்தம் அமைக்கப்படும். இத்திட்டம் மூலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணப்படும் என்றனா்.