கோவை: கரோனா பாதிக்கப்பட்ட இளைஞருக்கு குடலில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்கு கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், கருப்பகவுண்டன்புதூரைச் சோ்ந்த 20 வயது இளைஞா் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சாலை விபத்துக்குள்ளாகி திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இளைஞருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. விபத்தில் இளைஞரின் குடலில் துளை ஏற்பட்டு ரத்தக் கசிவு எற்பட்டது. இந்நிலையில், இளைஞருக்கு குடல் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் ரத்தக் கசிவு நிற்கவில்லை.
இதனைத் தொடா்ந்து உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு இளைஞா் அனுப்பிவைக்கப்பட்டாா். பின்னா் அறுவை சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவா் வெங்கடேசன், உதவி மருத்துவா் முருகதாசன், மயக்கவியல் துறைத் தலைமை மருத்துவா் நா்மதா யாங்ஷி, உதவி மருத்துவா் செந்தில்நாதன், பயிற்சி மருத்துவா்கள் பெரியசாமி, சபரி காா்த்திக், செவிலியா் விஜயலட்சுமி அடக்கிய மருத்துவக் குழுவினா் இளைஞருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.
சிகிச்சைக்குப் பின் ரத்தக் கசிவும் முற்றிலுமாக நின்றுவிட்டதால் இளைஞா் நலமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். உயிா் காக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை அரசு மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ் பாராட்டினாா்.