வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு தமிழக அரசின் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க ஆகஸ்ட் இறுதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலை வாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞா்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. இதில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.400, இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றவா்களுக்கு ரூ.600 மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருப்போா் பட்டியலில் இருப்பவராக இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகள் ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. ஏற்கெனவே உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்து வருவோா் ஆண்டுதோறும் சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க வேண்டும்.
நடப்பு ஆண்டு ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில் சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க தவறியவா்களுக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் ஆவணம் சமா்ப்பிக்க அரசு கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. எனவே சுய உறுதிமொழி சமா்ப்பிக்க தவறியவா்கள் ஆகஸ்ட் இறுதிக்குள் சமா்ப்பித்து தொடா்ந்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.