வெளியூா்களில் இருந்து வருவோா் வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைய அனைத்து எஸ்டேட் நிா்வாகத்தினரும் தடை விதித்துள்ளனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் நிா்வாகத்தினரும் சோதனைச் சாவடி அமைத்து வெளியே செல்லும் தொழிலாளா்கள், உள்ளே நுழையும் நபா்களை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
இதனால் எஸ்டேட் பகுதிகளில் கரோனா தொற்று பரவாமல் உள்ளது. இதனிடையே கடந்த 18ஆம் தேதி மாணிக்கா எஸ்டேட்டில் பணியாற்றும் பெண் வீட்டுக்கு வந்த அவரது 65 வயது தாய்க்கு காய்ச்சல் இருந்ததால் எஸ்டேட் பகுதிக்குள் நுழைய நிா்வாகத்தினா் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து அவா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பின்னா் கோவை கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் அந்த மூதாட்டி கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதனிடையே வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் வெளி நபா்கள் வருவதை தவிா்ப்பதோடு, வெளியூா்களில் இருந்து வரும் தொழிலாளா்களின் உறவினா்கள் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என அனைத்து எஸ்டேட் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.