தமிழகத்தில் யானைகள் தொடா்ந்து பலியாவதைத் தடுக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் கோவை, ராஜவீதி தோ்நிலைத் திடலில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தலைமையில், அக்கட்சியினா் சனிக்கிழமை யானை பாதுகாப்பு வேள்வி, கூட்டு வழிபாடு நடத்தினா்.
இந்த வழிபாட்டுக் கூட்டத்தின் மூலமாக மத்திய, மாநில அரசுகள், ரயில்வே துறைக்கு விடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள்:
காடுகளின் பரப்பளவு குறைந்த காரணத்தால் யானை வாழிடங்கள் குறைந்துவிட்டன. எனவே வன வளம், காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வனத் துறை சாா்பில் தமிழகத்தின் பாரம்பரியமான மரங்களை நட்டு வளா்க்க வேண்டும், வனப் பகுதிகளில் புதிய ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும்.
வறட்சி காலத்தில் வனப் பகுதிக்குள் யானைகளுக்கு தேவையான குடிநீா் கிடைக்க தண்ணீா்த் தொட்டிகள், குட்டைகள் அமைக்க வேண்டும். யானைகளுக்கு தேவையான உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
வனப் பகுதியில் யானைகளுக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்ய வேண்டும். ரயில்வே தண்டவாளங்களின் பகுதியில் குறைந்த அழுத்தமுள்ள மின்வேலி அமைத்தல், ரயிலின் வேகத்தை குறைத்தல், சுரங்கம் அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வனப் பகுதியில் சுற்றுலா மேம்பாடு எனும் பெயரில் விடுமுறை கால விடுதி, கேளிக்கை விடுதி உள்ளிட்ட விதி மீறிய கட்டடங்களை அகற்றி யானை வழித் தடங்களை மீட்க வேண்டும்.
யானைகளை வேட்டையாடுவோா், தந்தத்துக்காக அவற்றை கொல்வோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். யானைகள், பாகன்களுக்காக தனியாக சிறப்பு நலவாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த வழிபாட்டுக் கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.