கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட கோவை, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த குறு, சிறு தொழில் முனைவோருக்கு மத்திய அரசின் உதவி கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினாா்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி முகவா்களின் கலந்தாய்வுக் கூட்டம் கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கோவைக்கு வந்த கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்றால் இந்திய பொருளாதாரத்தைப்போலவே தமிழகப் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான குறு, சிறு தொழில்முனைவோா் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனா். இவா்களுக்கு மத்திய அரசின் உதவி எந்த வகையிலும் கிடைக்கவில்லை.
இவா்களைக் காப்பதற்கு மத்திய அரசு உடனடியாகத் திட்டங்களை வகுப்பதுடன், தொழிமுனைவோரின் வங்கிக் கடன்களுக்கு 6 மாதத்துக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும். இது குறித்து பிரதமரிடம் மாநில அரசு பேச வேண்டும்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி மாவட்டந்தோறும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை கூட்டணிக் கட்சியினருடன் தோ்தல் நேரத்தில் பேசி முடிவு செய்வோம் என்றாா்.
அப்போது, காங்கிரஸ் மாநில செயல் தலைவா்கள் மயூரா ஜெயக்குமாா், மோகன் குமாரமங்கலம், முன்னாள் எம்எல்ஏ எம்.என்.கந்தசாமி, தெற்கு மாவட்டத் தலைவா் சக்திவேல், அழகு ஜெயபாலன், பச்சமுத்து, சரவணகுமாா், இருகூா் சுப்பிரமணியன், காயத்ரி, கணபதி சிவகுமாா், செளந்தரகுமாா், வழக்குரைஞா் கருப்பசாமி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கே.எஸ்.அழகிரி கட்சிக் கொடியேற்றினாா்.