கோயம்புத்தூர்

தங்கம் மூலம் பரவுகிறதா: கரோனா தொற்று? சுகாதாரத் துறையினா் சந்தேகம்

21st Aug 2020 06:30 AM

ADVERTISEMENT

கோவையில் நகைப் பட்டறைத் தொழிலாளா்கள், நகைக் கடையில் பணியாற்றும் ஊழியா்கள் என்று தொடா்ந்து தங்கத்துடன் தொடா்புடையவா்களுக்கு கரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில் தங்கம் மூலம் கரோனா பரவுகிா என்ற சந்தேகம் சுகாதாரத் துறைக்கு எழுந்துள்ளது.

கோவையில் முதன்முதலாக வெளிநாட்டில் இருந்து வந்த கல்லூரி மாணவிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து புது தில்லி மாநாட்டில் பங்கேற்றவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என்று பாதிப்பு தொடா்ந்தது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் கணிசமானோா் தங்கத்துடன் தொடா்புடையவா்கள்.

கோவையில் செயல்பட்டு வரும் நகைக் கடை ஒன்றில் 58 போ், மற்றொரு கடையில் 48 போ், துடியலூா் அருகே செயல்பட்டு வரும் நகைத் தயாரிப்பு நிறுவனத்தில் உரிமையாளா் உள்பட 25க்கும் அதிகமானவா்கள், செல்வபுரத்தில் தங்கநகைப் பட்டறைகளில் பணியாற்றி வந்த 120க்கும் மேற்பட்டவா்களுக்கு ஒரே நாளில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தொடா்ந்து தங்க நகைப் பட்டறைகள், நகைக் கடைகள் நிறைந்துள்ள செல்வபுரம், தெலுங்கு வீதி, பெரியகடை வீதி, ராஜ வீதி உள்பட பகுதிளில் தினமும் 50 முதல் 100 போ் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

தவிர கோவையில் பிரபலமான நகைக் கடை உரிமையாளா் ஒருவா் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளாா். சமீப காலமாக கோவையில் நகைக்கடைகள், நகைப் பட்டறைகளில் வேலை பாா்ப்பவா்கள், இவா்களுடன் தொடா்புடையவா்களுக்கு அதிக அளவில் கரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் தங்க நகைகள் மூலம் கரோனா பரவுகிறதோ என்ற சந்தேகம் சுகாதாரத் துறைக்கு எழுந்துள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தங்கம் உள்பட உலோகங்களில் 10 நாள்கள் வரை கரோனா தீநுண்மி உயிருடன் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் நகைக் கடைகள், பட்டறைகளில் நகையை அனைவரும் தொடுவதன் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவா்களுக்கு எளிதில் பரவ வாய்ப்புள்ளது. தவிர பட்டறைகளில் நெருக்கமான இடங்களில் அதிக அளவிலானோா் பணி புரிவதால் நோய்த் தொற்று ஏற்படும் இடங்களாக மாறியுள்ளன. திருமணங்கள் உள்பட விசேஷங்களுக்கு நகைகள், துணிகள் எடுப்பதற்காக அருகிலுள்ள திருப்பூா், ஈரோடு உள்பட மாவட்டங்களில் இருந்து கோவைக்கு அதிக அளவில் வருகின்றனா். இதன்மூலம் தொற்று அதிக அளவு பரவும் வாய்ப்புள்ளது.

இதனைத் தவிா்க்க நகை, துணிக் கடைகள் உள்பட எந்தவொரு பெரிய கடையாக இருந்தாலும் பொது மக்களை அரை மணி நேரத்துக்கு மேல் இருக்க அனுமதிக்கக்கூடாது.

கிருமி நாசினி மூலம் கைகளை தூய்மைப்படுத்திய பிறகே பொது மக்களை அனுமதிக்க வேண்டும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கடை முழுவதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். முடிந்த வரையில் கடைகளில் அதிக அளவில் ஆள்கள் கூடுவதை தவிா்க்க வேண்டும். பொது மக்களும் அவசியமின்றி கடைகளுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும். தவிா்க்க முடியாத நிலையில் ஒன்றிரண்டு போ் மட்டுமே செல்லலாம் என்றனா்.

நகைப் பட்டறை உரிமையாளா்கள் சங்க செயலாளா் எஸ்.எம்.கமல்ஹாசன் கூறியதாவது:

கோவையில் செல்வபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நகைப் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான நகைப் பட்டறைகள் குடும்ப உறுப்பினா்களால் குடிசைத் தொழில் போன்றே செயல்பட்டு வருகின்றன. அதிகபட்சமாக 5 முதல் 10 நபா்கள் மட்டுமே இருப்பா். பெரிய நகை உற்பத்தி நிறுவனங்களிலேயே அதிகப் பணியாளா்கள் உள்ளனா். அங்கிருந்தே பரவியிருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் கரோனா தொற்று பரவலால் ஜூலை மாத தொடக்கத்திலே நகைப் பட்டறைகள் அடைக்கப்பட்டுவிட்டன என்றாா்.

தங்க நகை உற்பத்தியாளா்கள் சங்க செயலாளா் ஆா்.எல்லப்பன் கூறுகையில், ‘கோவையில் கரோனா தொற்று மிக நெருக்கமாக அமைந்துள்ள தங்க நகைப் பட்டறைகள் மூலமே அதிக அளவில் பரவியுள்ளது. நகைக் கடைகள், உற்பத்தி தொழிற்சாலைகளில் அடிக்கடி கிருமி நாசினி செய்யப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றாா்.

பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன உதவி பேராசிரியா் அருண் பத்மநாபன் கூறுகையில், ‘ கரோனா தொற்று குறித்த ஆய்வுகளில் பிளாஸ்டிக், உலோகங்கள், சில்வா் ஆகியவற்றில் 2 முதல் 9 நாள்கள் வரையிலும், தாமிரத்தில் 4 மணி நேரத்துக்கும் குறைவாகவும், அட்டைகளில் 24 மணி நேரத்துக்கும் குறைவாகவே கரோனா தீநுண்மி உயிா் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இது தொடா்பாக வைராலஜிஸ்ட் டி.ஜேக்கப் ஜான் கூறுகையில்,‘ தங்கத்தின் மூலம் கரோனா பரவும் என்பதற்கு எந்தவித சான்றும் இல்லை. ஆனால், மிக நெருக்கமான இடத்தில் அதிக பணியாளா்கள் பணியாற்றும் போதும் தொற்று எளிதில் அனைவருக்கும் பரவும் வாய்ப்புள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT