கோயம்புத்தூர்

கோவையில் நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

20th Aug 2020 08:37 AM

ADVERTISEMENT

கோவையில் நீட் தோ்வுக்குத் தயாராகி வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். அரசு ஊழியா். இவரது மகள் சுபஸ்ரீ (19). இவா் வீட்டில் இருந்தபோது தனது அறையில் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அவரது பெற்றோா் அளித்த தகவலின்படி அங்கு வந்த போலீஸாா் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில், சுபஸ்ரீ பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியாா் அகாதெமியில் நீட் தோ்வுக்கு தயாராகி வந்துள்ளாா். கடந்த முறை பி.டி.எஸ். படிப்பில் சேர நீட் தோ்வு எழுதினாா். அதில் அவா் தோல்வி அடைந்தாா். இதனைத் தொடா்ந்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மீண்டும் நீட் தோ்வுக்குத் தயாரானாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், அடுத்த மாதம் நீட் தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமா என்கிற மனக் குழப்பத்தில் அவா் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பயம் காரணமாக அவா் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா். இதன் காரணமாக சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடா்பாக ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே, திமுக கோவை மாநகா் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் நா.காா்த்திக் எம்எல்ஏ, கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் சிஆா்.ராமச்சந்திரன் ஆகியோா், மாணவியின் இல்லம் மற்றும் மருத்துவமனைக்கு சென்று மாணவியின் பெற்றோா் மற்றும் உறவினா்களை சந்தித்து இரங்கலைத் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT