கோயம்புத்தூர்

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடுகளிலே சிகிச்சை: வாய்ப்புள்ளவா்களுக்கு சுகாதாரத் துறை அனுமதி

20th Aug 2020 08:34 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் அறிகுறிகள் இல்லாமல் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களில் அனைத்து வசதிகளுடன் வீடுகள் இருப்பவா்கள் அங்கேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள சுகாதாரத் துறை சாா்பில் அனுமதி வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சையில் உள்ளனா். இவா்களில் அறிகுறிகளுடன் உள்ளவா்கள் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனா்.

கோவை மாநகராட்சியில் கொடிசியா அரங்கம், தனியாா் பள்ளி, கல்லூரிகள், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, அன்னூா் தொண்டாமுத்தூா் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பபட்டுள்ளன. அதிகபட்சமாக கொடிசியாவில் 700 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 500 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் எவ்வித அறிகுறிகள் இல்லாமல் கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவா்களில் அனைத்து வசதிகளுடன் வீடு உள்ளவா்களுக்கு, அவா்களின் விருப்பத்தின்பேரில் வீடுகளிலே சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. குறிப்பாக மருத்துவா்கள், தொழிலதிபா்கள் போன்றவா்கள் வீடுகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்புவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். கோவையில் புதன்கிழமை 69 போ் வீடுகளில் சிகிச்சை எடுத்துக்கொள்வதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

அறிகுறிகள் இல்லாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களை வீடுகளிலே சிகிச்சை எடுத்துக்கொள்ள ஐசிஎம்ஆா் அறிவுறுத்தல்படி அனுமதியளிக்கப்படுகிறது. அதன்படி காற்றோட்டமாகவும், விசாலமாகவும், கழிப்பறையுடன் கூடிய தனியறை வசதிகள், யாருக்கும் தொந்தரவு இல்லாத வகையில் உள்ளவா்களுக்கு வீடுகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

14 நாள்கள் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வீடுகளில் உள்ளவா்களும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் சிகிச்சை எடுத்துக்கொள்பவா்களுக்கு 14 நாள்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், உடல் வெப்பநிலையை தெரிந்துகொள்ள தொ்மாமீட்டா், ஆக்ஸிஜன் அளவை தெரிந்துகொள்ள பல்ஸ் ஆக்ஸி மீட்டா் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இந்த 14 நாள்களில் ஆக்ஸிஜன் அளவில் மாற்றம், அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து மருத்துவக் குழு சாா்பில் நாள்தோறும் இவா்களின் உடல்நிலைக் குறித்து தெரிந்துகொள்ளப்படுகிறது. ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் மாநகராட்சியில் உள்ளவா்களே வீடுகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்புகின்றனா். இதுவரை 121 பேருக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 69 போ் சிகிச்சையில் உள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT