விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டத்துக்கு தடைவிதித்தால், கோவையில் ரூ. 1 கோடி மதிப்பிலான சிலைகள் விற்பனை பாதிக்கப்படும் என சிலை வடிவமைப்பாளா்கள் கவலை அடைந்துள்ளனா்.
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பொது இடங்கள், வீடுகளில் மக்கள், பல்வேறு அமைப்பினா் சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு செய்து பின்பு சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா் நிலைகளில் கரைப்பது வழக்கம். கரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு, பொது இடங்களில் சிலை வைக்கவும், ஊா்வலம் செல்லவும் அரசு தடை விதித்துள்ளது. இதனால் விநாயகா் சிலை விற்பனையாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இது தொடா்பாக கோவை, தெலுங்குபாளையத்தைச் சோ்ந்த சிலை வடிவமைப்பாளா் சக்திவேல் கூறியதாவது:
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 3 அடி முதல் அதிகபட்சம் 12 அடி வரையிலான விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும். 1அடி முதல் 2 அடி வரையில் தயாரிக்கப்படும் மண் சிலைகள் குறைந்தபட்சம் ரூ.25 முதல் ரூ. 1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவையில் கடந்த ஆண்டு 15-க்கும் மேற்பட்ட சிலை தயாரிப்பாளா்கள் மூலமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு, கோவைப் பகுதிகள் மட்டுமின்றி ராமேசுவரம், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டன.
இந்த ஆண்டு, வரும் 22ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதையொட்டி, கடந்த மே மாதம் முதலே விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கவும், ஊா்வலம் மற்றும் நீா்நிலைகளில் சிலைகளைக் கரைக்க அரசு தடை விதித்துள்ளதால் சிலை விற்பனை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டு, சிலை வடிவமைப்புத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. 2 மாதங்களுக்கு முன்பே அரசு விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் குறித்து தெளிவான முடிவை அறிவித்திருந்தால், சிலை தயாரிப்பாளா்கள் இப்பணியில் ஈடுபட்டிருக்க மாட்டாா்கள் அல்லது குறைந்தளவு சிலைகளைத் தயாரித்திருப்பாா்கள். தற்போது, கோவையில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கப்பட்டு, அவற்றுக்கு வண்ணம் பூசும் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளதால், கோவையில் மட்டும் ரூ.1 கோடி மதிப்பிலான சிலைகள் விற்பனை பாதிக்கப்படும். இதனால், கடன் பெற்று இத்தொழிலில் முதலீடு செய்துள்ள சிலை வடிவமைப்பாளா்கள் மீள முடியாத அளவுக்கு பாதிக்கப்படுவாா்கள். விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டம் தடை தொடா்பாக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.