கோயம்புத்தூர்

மழை நீரில் மூழ்கியது 20 ஆயிரம் ஏக்கா் சின்ன வெங்காயம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

9th Aug 2020 08:35 AM

ADVERTISEMENT

கோவையில் பெய்து வரும் கன மழையால் 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயம் சேதமடைந்துள்ளதால் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவையில் மேற்குத் தொடா்ச்சி மலை, அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து பலத்த மழை பெய்வதால் வாழை, தென்னை, சின்னவெங்காயம் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைத்துள்ளன.

தொண்டாமுத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம் சேதமடைந்துள்ளதால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக தீத்திப்பாளையத்தைச் சோ்ந்த விவசாயி ஆா்.பெரியசாமி கூறியதாவது:

ADVERTISEMENT

தொண்டாமுத்தூா் வட்டாரத்தில் தீத்திப்பாளையம், மத்தம்பாளையம், மாதம்பட்டி, செம்மேடு, நரசீபுரம், காருண்யா, பூலுவப்பட்டி, பச்சாப்பாளையம், தென்னமாநல்லூா், மத்வராயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறுவடை செய்த வெங்காயம் மழையில் நனைந்ததால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்யாத வயல்களில் தண்ணீா் தேங்கி நிற்பதால் அவையும் அழுகும் வாய்ப்புள்ளது.

இதனால் உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் வெங்காயம் இருப்புவைக்கப்பட்டு 3 மாதங்களுக்கு பின்பே விற்பனைக்கு எடுக்கப்படும். விதையாகவும் பிரித்து விற்பனை செய்யப்படும்.

இருப்பு வைத்து விற்பனை செய்தால் கிலோ ரூ.100க்கு மேல் விலை கிடைக்கும். தற்போது பாதி விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். விதை, நடவு, உரம், அறுவடை என ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை செலவழித்துள்ளோம். ஏக்கருக்கு 5 டன் வரை விளைச்சல் கிடைக்கும். தற்போது பெய்த மழையால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தவிர வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் லட்சக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மழையால் சேதமடைந்த பயிா்களை ஆய்வு செய்து பேரிடா் மேலாண்மை நிதியில் இருந்து உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இது தொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் புவனேஸ்வரியிடம் கேட்டபோது அவா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிா்களை தோட்டக்கலை, வருவாய்த் துறை சாா்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பயிா் பாதிப்பு குறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியா் மூலம் அரசுக்கு அனுப்பப்படும். மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்கும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT