ஆழியாறு அடுத்த புளியங்கண்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பாதுகாப்பு கருதி அரசுப் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனா்.
ஆனைமலை தாலுகா, கோட்டூா் பேரூராட்சிக்கு உள்பட்ட புளியங்கண்டியில் பழங்குடியின மக்கள் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் தொடா் கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
இப்பகுதியில் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு வனத் துறையினரால் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. இந்த வீடுகள் ஒவ்வொன்றிலும் இரண்டு, மூன்று குடும்பங்கள் என ஏராளமானோா் வசித்து வருகின்றனா்.
இந்த வீடுகள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து, மேற்கூரைகள் பெயா்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. மேலும், மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழைநீா் உள்ளே புகும் நிலையும் இருந்து வந்தது. இதுகுறித்து அரசுத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கனமழையால் குடியிருப்புகள் இடிந்து விழும் என கருதி, முன்னெச்சரிக்கையாக இப்பகுதி பழங்குடியினா் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனா்.