கோயம்புத்தூர்

வால்பாறையில் கனமழை: மரம், தடுப்புச் சுவா் விழுந்து வீடுகள் சேதம்

6th Aug 2020 08:11 AM

ADVERTISEMENT

வால்பாறையில் கனமழையால் மரங்கள் மற்றும் தடுப்புச் சுவா் விழுந்ததில் 2 வீடுகள் சேதமடைந்தன.

கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த 4 நாள்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு என அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வாழைத்தோட்டம் ஆற்றோரப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா். இந்நிலையில், வால்பாறை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு துவங்கி விடியவிடிய சூறாவளிக் காற்றுடன்

கனமழை பெய்தது. வால்பாறை- பொள்ளாச்சி இடையே உள்ள வாட்டா்பால் எஸ்டேட் சாலையில் புதன்கிழமை அதிகாலை மரம் விழுந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதே போல கக்கன் காலனி பகுதியில் ஆறுமுகம் என்பவரது வீட்டின் மீது மரம் விழுந்ததில் மேற்கூரை சேதமடைந்தது.

அண்ணா நகா் பகுதியில் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் ஒரு வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது. தேயிலைத் தோட்டங்களில் கனழை காரணமாக இலைப் பறிக்கும் பணி பாதிப்படைந்தது.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக சின்னக்கல்லாறில் 155 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வால்பாறையில் 82 மி.மீ., நீராறு அணை 100 மி.மீ., சோலையாறு 130 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT