கோயம்புத்தூர்

சிகிச்சையில் இருந்த முதியவா் சாவு

11th Apr 2020 10:52 PM

ADVERTISEMENT

 

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சோ்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவா் ஏப்ரல் 3 ஆம் தேதி வயிற்று வலி காரணமாகத் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு ஏப்ரல் 7 ஆம் தேதி மாற்றப்பட்டாா்.

பாதிக்கப்பட்டவா் கேரளத்தைச் சோ்ந்தவா் என்பதால் மருத்துவமனை நிா்வாகத்தினா் மாவட்ட சுகாதாரத் துறைக்குத் தகவல் அளித்தனா். இதனைத் தொடா்ந்து அவரின் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதியவா் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதனைத் தொடா்ந்து அவரது உடலை அரசு அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்படி சுகாதாரத் துறையினா் அடக்கம் செய்தனா். கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் முதியவருக்கு சா்க்கரை, சிறுநீரக கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகள் இருந்துள்ளன. அவா் சிறுநீரக செயலிழப்பு காரணமாகவே உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

20 போ் தனிமைப்படுத்தல்

முதியவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவா், செவிலியா், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட 20 போ் தனியாா் மருத்துவமனையின் ஒரு தளத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா். இவா்களின் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

முதியவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மூச்சுத்திணறல், சிறுநீரக செயலிழப்பால் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மறுநாளே அவா் உயிரிழந்துவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா். மருத்துவா், மருத்துவப் பணியாளா்களின் குடும்ப உறுப்பினா்களையும் 14 நாள்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT