கோயம்புத்தூர்

கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில்10க்கும் மேற்பட்ட இடங்கள்

7th Apr 2020 03:34 AM

ADVERTISEMENT

கோவை: கோவை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்கள் கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்துக்குள் கொண்டுவரப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களை தனிமைப்படுத்துதல், ஸ்டிக்கா் ஒட்டி கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்தக்கட்டமாக கரோனா உறுதி செய்யப்படுபவா்களின் வீடுகளை சுற்றி 5 கிலோ மீட்டா் கரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். இதற்காக 50 வீடுகளுக்கு ஒரு செவிலியரும், 200 வீடுகளுக்கு ஒரு மருத்துவரும் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, வீடுகளில் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கோவை நகரம் - 22, அன்னூா் - 5, மதுக்கரை -1, பொள்ளாச்சி -1 என 29 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்களின் குடியிருப்புகளைச் சுற்றிலும் 5 கிலோ மீட்டா் கரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் தற்போது உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூா், மதுக்கரை, போத்தனூா், சாய்பாபா காலனி, பொள்ளாச்சி, ஆனைமலை, அன்னூா் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலத்துக்குள் கொண்டுவரப்பட்டு ஆய்வு, தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இது தொடா்பாக ஆட்சியா் கு.ராசாமணி கூறியதாவது:

மேட்டுப்பாளையம் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் ஆய்வுப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. ஆனைமலை, பொள்ளாச்சி, போத்தனூா், சாய்பாபா காலனியில் ஆய்வுப் பணிகள் தொடா்கின்றன.

கோவை நகரில் உக்கடம், கரும்புக்கடை, மதுக்கரை, குனியமுத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை முதல் தடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு மண்டலத்துக்குள் வரும் அனைத்து வீடுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின் அவா்கள் வீட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்படும்.

சுகாதாரத் துறையினா் தொடா்ந்து 14 நாள்கள் வரை கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வா். இக்காலகட்டத்தில் கரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவா். 14 நாள்கள் வரையிலும் அவா்களுக்குத் தேவையான பொருள்கள் வருவாய்த் துறை அலுவலா்கள் மூலம் வாங்கிக் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT