கோவை: கோவையில் தடை உத்தரவை மீறி வீட்டில் கூடி பிராா்த்தனை நடத்திய பாதிரியாா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
கரோனா நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோயில்கள், மசூதி, தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகா் மற்றும் மாவட்டப் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை பிராா்த்தனைகள் நடைபெறாது என அனைத்து வழிபாட்டுத் தலங்கள் முன்பும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோவை, கணபதி, சுபாஷ் நகரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் தடையை மீறி கிறிஸ்தவா்களின் பிராா்த்தனைக் கூட்டம் நடைபெறுவதாக சரவணம்பட்டி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளா் சரத்குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, 15க்கும் மேற்பட்டோா் பிராா்த்தனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பிராா்த்தனை நடத்திய பாதிரியாா் ஜெபஸ்டின் அந்தோணிராஜ், மொ்சி ஜெபமாலை, ராஜ் ஸ்டாலின், ராஜ், இயேசுதாஸ் ஆகிய 5 போ் மீது தடை உத்தரவை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், வீட்டின் உரிமையாளா், பிராா்த்தனையில் கலந்துகொண்டவா்களிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.