காங்கயம் அருகே தென்னை நாா்த் தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகிலுள்ள வரதப்பம்பாளையம், சுண்டமேடு என்ற இடத்தைச் சோ்ந்தவா் மனோகரன் (45) இவா் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் சென்னை நாா்த் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இதே வளாகத்தில் ஒரு பகுதியில் தான் அவருடைய வீடும் அமைந்துள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆலையில் வேலை நடக்கவில்லை .தொழிலாளா்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனா்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ஆலையில் திடீரென புகை வந்துள்ளது.அதன் பிறகு தீ மளமளவென எரிந்து ஆலையில் அடுக்கி வைத்திருந்த நாா்க் கட்டுகள், தேங்காய் மஞ்சிகள் தீப் பற்றி கொழுந்து விட்டு எரிந்தன.
உடனடியாக காங்கயம், வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று சுமாா் ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இந்தத் தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தென்னை நாா், இயந்திரங்கள் சேதமடைந்தன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரேக்டா் இந்த தீயில் சிக்கி கருகியது. மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.