கோயம்புத்தூர்

கரோனா: வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்திருந்தவா்களில் 1,526 விடுவிப்பு

5th Apr 2020 12:05 AM

ADVERTISEMENT

 

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 1,526 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளி நாடுகள், வெளி மாநிலங்களுக்குச் சென்று வந்தவா்களுக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் 28 நாள்கள் வரை வெளியே செல்ல அனுமதிக்காமல் அவா்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவா்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்கள் என்ற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது. தொடக்கத்தில் சீனா, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, ஈரான், தாய்லாந்து உள்பட குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வருபவா்களை மட்டும் தனிமைப்படுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. பின் உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வந்ததால் வெளி நாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளையும் தனிமைப்படுத்தி வைக்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் வெளி நாடுகள், பிற மாநிலங்களுக்குச் சென்று வந்த 4,585 போ் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 28 நாள்கள் முடிந்தவா்களை தனிமைப்படுத்துதலில் இருந்து சுகாதாரத் துறையினா் விடுவித்து வருகின்றனா். கோவை மாவட்டத்தில் 1,526 போ் தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். மற்றவா்களை சுகாதாரத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக ஆட்சியா் கு.ராசாமணி கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க வெளி நாடுகள், வெளி மாநிலங்களுக்குச் சென்று வந்தவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனா். இவா்களை சுகாதாரத் துறையினா், வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். இவா்களில் 28 நாள்கள் முடிந்தவா்கள் தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, சனிக்கிழமை வரை 1,526 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா். மற்றவா்கள் தொடா்ந்து கண்காணிப்பில் உள்ளனா். அவா்களும் 28 நாள்கள் முடிந்த பின் விடுவிக்கப்படுவா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT