கோயம்புத்தூர்

பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயார்

22nd Sep 2019 05:44 AM

ADVERTISEMENT


சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் நிலையில் உள்ளதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற மத்திய அரசின் நிதி நிலை அறிக்கைக்குப் பின் நாடு முழுவதும் பொருளாதார சுணக்க நிலை ஏற்பட்டுள்ளதாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அனைத்துத் துறைகளிலும் உள்ள சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து நிதியமைச்சர் நேரடியாக தொழில் துறையினருடன் விவாதித்து வருகிறார். பொருளாதார சூழல் மேம்பாட்டுக்காக வாரம்தோறும் புதிய பொருளாதார அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வாராக் கடன்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று வாராக் கடன்கள் உள்ள நிறுவனமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் வரையில் அறிவிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் வெட் கிரைண்டர்களுக்கு 12 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. 5 சதவீதமாகவும்,  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 30 சதவீதத்தில் இருந்த வரி 22 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஜாப் ஆர்டர் தொழில்களுக்கு 18 சதவீதத்தில் 12 சதவீதமாக ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது. 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம். 
தேவையானவர்களுக்கு கார், வீடு, தொழில் உள்ளிட்ட அனைத்துக்கும் கடன்களும் வெளிப்படையாக வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் நிலையில் உள்ளது. அதற்குத் தேவையான பொருளாதார நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT