கோயம்புத்தூர்

சுற்றுலா பயணச்சீட்டு முன்பதிவு மூலம் ரூ.3 கோடி மோசடி: நிறுவன உரிமையாளருக்கு வலை

22nd Sep 2019 06:11 AM

ADVERTISEMENT


சுற்றுலாப் பயணச்சீட்டு முன்பதிவு நடத்தி ரூ. 3 கோடி வரை மோசடி செய்த நிறுவன உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர். 
கோவை, சித்தாபுதூர் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர் சுரேஷ். இந்த நிறுவனம்,  சலுகைத் சுற்றுலாத் திட்டத்தின் மூலமாக சீரடி, கோவா, மும்பை,அந்தமான் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபை போன்ற வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக சலுகை கட்டணங்களை அண்மையில் அறிவித்தது. 
மேலும், பயணம் செய்வதற்கு சில மாதங்கள் முன்பாக பயணச்சீட்டுகளைப் பதிவு செய்தால், அவர்களுக்குச் சலுகைகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது. இதை நம்பி ஏராளமானோர் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா செல்வதற்காக பயணச்சீட்டுகள் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை காலை திடீரென  மூடப்பட்டது. பயணச்சீட்டுகள் வாங்கச் சென்ற  பயணிகள், நிறுவனம் மூடப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்தத் தகவல் பரவியதைத் தொடர்ந்து, ஏராளமானோர் அந்த நிறுவனம் முன்பு குவியத் தொடங்கினர். அவர்களை போலீஸார், காவல் நிலையத்தில் புகார் தரும்படி அறிவுறுத்தினர். 
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை புகார் அளித்தனர். உள்நாடு, வெளிநாடு சுற்றுலா செல்வதற்கு ரூ.3 ஆயிரம் தொடங்கி லட்சக்கணக்கில் வசூலிக்கப்பட்டதாகவும், ரூ.3 கோடி வரை பணத்தை நிறுவனத்தை நடத்தி வந்த  சுரேஷ்  மோசடி செய்துவிட்டு தலைமறைவானதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மாநகர குற்றப் பிரிவு போலீஸார், தலைமறைவான சுரேஷைத் தேடி வருகின்றனர். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT