கோயம்புத்தூர்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் ரூ.1 லட்சம் கோடி சேமிக்கப்படும்: எஸ்.குருமூர்த்தி

22nd Sep 2019 01:08 AM

ADVERTISEMENT


காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் ரூ.1 லட்சம் கோடி சேமிக்கப்படும் என்று பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.
இந்திய பொருளாதாரம், கலாசார மையம் சார்பில் சட்டப் பிரிவு 370 நீக்கம் குறித்த சிறப்புரை நிகழ்ச்சி, கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எஸ்.குருமூர்த்தி மேலும் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை வல்லபபாய் படேலிடம் ஒப்படைத்திருந்தால் அவர் அதை அப்போதே வேறு மாதிரியாக கையாண்டிருப்பார்.
 படேல் போன்றே நேருவும் தேசபக்தர்தான், நல்ல மனிதர்தான். ஆனால், நாட்டை ஆளும் தலைவர் நல்லவராக இருந்தாலும் வல்லவராக இல்லாவிட்டால் அந்த நாட்டுக்குப் பிரச்னைகள்தான் வரும் என்பதற்கு ஜம்மு-காஷ்மீர் நல்ல உதாரணம். 
படேலின் புத்திசாலித்தனத்தாலேயே 370-ஆவது சட்டப் பிரிவில் தற்காலிகமானது என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. அவர் சேர்த்த அந்த வார்த்தைதான் இப்போது நமக்கு உதவியுள்ளது.
சிறப்பு அந்தஸ்தை நீக்கும் விஷயத்தில் நரேந்திர மோடி அரசு புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டுள்ளது. இப்படி ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுதான், யாரும் எதிர்பார்க்காத வகையில் 2015-இல் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தது. அவர்களுடன் கூட்டணியில் இருந்தபோது இதற்காக தனக்குத் தேவையான விஷயங்களைத் தெரிந்து கொண்டது. எதற்காக பாஜக தன்னுடன் கூட்டணி அமைத்தது என்பதை மெஹபூபா முஃப்தி தெரிந்து கொள்ளும் முன்னதாக, அந்தக் கூட்டணியில் இருந்து விலகி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது.
 இதற்கிடையே, கடந்த 2009 முதல் அந்த மாநிலத்தில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் குறைந்து வருவதையும், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததையும் கணக்கில் கொண்டது பாஜக.
இதற்கிடையேதான் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 2016-இல் 3,415 ஆக இருந்த கல்லெறி சம்பவங்கள், 2017-இல் வெறும் 51 ஆக குறைந்தன. பயங்கரவாத செயல்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் ஏதாவது பிரச்னை வருமா என்பதை அறிந்து கொள்வதற்காகவே, அதற்கும் முன்னதாக முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பிறகு, அந்த மாநிலத்தில் இருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வெளியேற்றப்பட்டனர். இவ்வளவும் செய்த பிறகே அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடத்தப்பட்டது.
காஷ்மீரின் நிலைமை வரும் நாள்களில் இயல்பாக இருக்கும். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சேமிப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என்றார்.
முன்னதாக, ஓய்வுபெற்ற விமானப் படை அதிகாரி விஜயகுமார் காஷ்மீர் நிலவரம் குறித்துப் பேசினார். நிகழ்ச்சியில், பாஜகவின் மாநில அறிவுசார் பிரிவின் அமைப்பாளர் கனகசபாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT