கோயம்புத்தூர்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி

22nd Sep 2019 05:43 AM

ADVERTISEMENT


வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தொழில் கடன் வழங்கும் திட்டம் (யூ.ஒய்.இ.ஜி.பி) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தித் தொழில்களை அதிகபட்சம் ரூ.10 லட்சம் முதலீட்டிலும், சேவைத் தொழில்களை அதிகபட்சம் ரூ.3 லட்சம் முதலீட்டிலும், வியாபாரத் தொழில்களை அதிகபட்சம் ரூ.1 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம்.
மனுதாரர்களுக்கு மாநில அரசால் 25 சதவீதம் மானியமாக அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வழங்கப்படும். 5 சதவீதம் சுய முதலீடு அவசியம். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கடன் பெற சொத்துப் பிணையம் தேவையில்லை. மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, பொதுப் பிரிவினருக்கு அதிகபட்சமாக 35 வயதும், சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இலவச பொது வசதி மையம் மூலமாக விண்ணப்பதாரரின் தகவல்களை சரியாôகப் பூர்த்தி செய்த பின்னர், பள்ளி மாற்றுச் சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, வட்டாச்சியரிடம் இருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பின்னர் பதிவிறக்கம் செய்து, திட்ட அறிக்கை படிவத்தைப் பூர்த்தி செய்து கையொப்பமிட்ட விண்ணப்பம் மற்றும் உறுதிமொழிப் படிவம் ஆகியவற்றை மாவட்ட தொழில் மைய அலுவலகத்துக்கு நேர்காணலுக்கு அழைக்கும்போது, சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், நேர்காணலின்போது, அனைத்து அசல் ஆவணங்களையும் சரிபார்க்க சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டில், இத்திட்டத்தின் கீழ் 295 நபர்களுக்கு ரூ.1.75 கோடிய மானியத்துடன் கூடிய ரூ.600 லட்சம் முதலீட்டில் தொழில் துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT