மின்சார வாரியம் தொடர்பான பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மின்நுகர்வோர்கள் பணம் எதுவும் வழங்கத் தேவையில்லை என்று மின்வாரிய தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்வாரிய நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் டாடாபாத் மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமைப் பொறியாளர் அருள்மொழி தலைமை தாங்கினார். மேற்பார்வைப் பொறியாளர்கள் கலைச்செல்வி, ஸ்டாலின், பாபு, கோட்ட செயற்பொறியாளர்கள், மாநகர செயற்பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நுகர்வோர் அமைப்புகளின் சார்பில் கன்ஸ்யூமர் வாய்ஸ் லோகு, கன்ஸ்யூமர் காஸஸ் கதிர்மதியோன், மணிகண்டன், பாலன், இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசும்போது, மாநகரில் சாலையோர மின்சாரப் பெட்டிகளில் விளம்பரங்கள் ஒட்டப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால், மின் விபத்துகள் நேரிடும் நிலை உள்ளது. காளப்பட்டி, நேரு நகர், பொன்னையராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இறந்துபோனவர்களின் பெயர்களில் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்கம்பம் மாற்றுதல், புதிய கம்பம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்குப் பணம் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்னணு மீட்டர் மாற்றும்போது, கூடுதல் வைப்புத் தொகை கேட்டு நுகர்வோரை வற்புறுத்தக் கூடாது.
குறிப்பிட்ட காலத்துக்குள் மின் இணைப்பு வழங்காதபட்சத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின் படி, விண்ணப்பதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதற்கு பதிலளித்த தலைமைப் பொறியாளர், மின்சாரப் பெட்டிகளில் விளம்பரங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், இறந்தவர்களின் பெயர்களில் மின் இணைப்பு வழங்கிய அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மின்வாரியம் தொடர்பான வேலைகளுக்கு பொதுமக்கள் யாரும் ஊழியர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ பணம் கொடுக்கத் தேவையில்லை. அதைப் போலவே மின்னணு மீட்டர் பொருத்திய பிறகு கூடுதல் வைப்புத் தொகை செலுத்த வேண்டியதில்லை. ஊழியர்கள் பணம் கேட்டால் அது தொடர்பாக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.