பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் 18ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் பேராசிரியர் ஆர்.ரங்கநாதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.மகேந்திரன் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்(பொறுப்பு) கே.முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு முடித்த 342 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: நேரம் தவறாமை, குறிக்கோளை அடைவதில் விடாமுயற்சி, சமூக ஒழுக்கம் ஆகியவை இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் அவசியமாகும். கல்லூரி படிப்பை முடித்து விட்டு வாழ்க்கையின் மற்றொரு கட்டத்துக்கு அடியெடுத்து வைக்கும் நீங்கள் இப்பண்புகளை கடைபிடித்து சமூகத்தில் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் தகர்த்தெறிந்து வெற்றிபெற வேண்டும் என்றார்.
விழாவில் கல்லூரி செயலர் சுகுணா தேவராஜன், இணை செயலர் காயத்ரி சிவகுமார், நிர்வாக அலுவலர் பத்மலோசனா உள்பட பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.