மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உள்பட்ட 9ஆவது வார்டு நடூர் கிராம மக்களுக்கு 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து அன்னூர் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நகரப் பகுதிகளில் 24 மணி நேரமும் தடையில்லாமல் குடிநீர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் நகரப் பகுதிகளில் குடிநீர் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. கடந்த 15 நாள்களுக்கும் மேலாக நடூர், மாகாதேவபுரம், மணிநகர் உள்ளிட்ட நகராட்சியின் பல பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக 9ஆவது வார்டுக்கு உள்பட்ட நடூர் பகுதியில் 20 நாள்களாகியும் குடிநீர் வழங்காதது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை பொதுமக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நடூர் கிராம மக்கள், மேட்டுப்பாளையம் -அன்னூர் சாலையில் காலி குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் துணை ஆய்வாளர் பிரபாகரன், போக்குவரத்து துணை ஆய்வாளர் முரளி மற்றும் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்து மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள், குடிநீர் வழங்கும் குழாய் உடைத்துள்ளதோடு நீரேற்று நிலையத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மேட்டுப்பாளையம் -அன்னூர் சாலையில் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.