கோவை, வடவள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை, வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது மகன்களைப் பார்ப்பதற்காக சங்கர் அமெரிக்கா சென்றார். வெளிநாடு சென்றதால் சாவியை தனது உறவினர் அனந்தகிருஷ்ணன் என்பவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சங்கருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் அளித்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவரது உறவினர் அனந்தகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்ததை உறுதி செய்தார். இதுகுறித்து அனந்தகிருஷ்ணன் அளித்தப் புகாரின் பேரில் வடவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.