கோயம்புத்தூர்

ரூ.3 கோடி நிதி மோசடி: தனியார் அமைப்பின் நிர்வாகிகள் இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

17th Sep 2019 09:11 AM

ADVERTISEMENT

ரூ. 3 கோடி நிதி மோசடியில் ஈடுபட்ட தனியார் அமைப்பின் நிர்வாகிகள் இருவருக்குத் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
 நீலகிரி மாவட்டம், குன்னூரில் சமூகப் பணி என்ற தனியார் அமைப்பு இயங்கி வந்தது. இதன் தலைவராக மார்கோ என்பவரும், உறுப்பினராக ஞானக்கண் என்பவரும் பொறுப்பு வகித்தனர். இந்த அமைப்புக்கு 1992 ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை வெளிநாட்டில் இருந்து ரூ.22 கோடி நிதி வழங்கப்பட்டது. நிதியில் ரூ.3 கோடியை அமைப்பின் தலைவராக இருந்த மார்கோ, உறுப்பினர் ஞானக்கண் ஆகியோர் மோசடி செய்து தங்களது சொந்த வங்கிக் கணக்கில் சேர்த்தது தெரியவந்தது.
 இந்த மோசடி தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கு கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் மார்கோ, ஞானக்கண் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT