வீரபாண்டியில் பேருந்துக்காக சாலையோரம் காத்துக் கொண்டிருந்த இரண்டு மூதாட்டிகள் மீது கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்.
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த எண் 4 வீரபாண்டியிலுள்ள பட்டத்தரசியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் ராமசாமியின் மனைவி அங்காத்தாள்(61). இதே பகுதியில் உள்ள அம்மன் கோயில் வீதியில் வசிக்கும் நடராஜனின் மனைவி சரஸ்வதி (70). இருவரும் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர்.
பெரியநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் சந்தையில் வியாபாரம் செய்வதற்காக காய்கறிகளை எடுத்துக் கொண்டு சனிக்கிழமை மாலை வீரபாண்டி பேருந்து நிறுத்தத்தில் சிற்றுந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து சாமநாயக்கன்பாளையத்திலிருந்து சென்றுகொண்டிருந்த கார் இருவரும் மீதும் மோதியது.
இதில் படுகாயமடைந்த இருவரும் பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அங்காத்தாள் இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சரஸ்வதி அங்கு இறந்து போனார்.
இதுகுறித்து அங்காத்தாளின் மகன் கோபால்சாமி பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.