கோயம்புத்தூர்

குழந்தையின் தொடையில் ஊசி சிக்கிய விவகாரம்: சுகாதார இணை இயக்குநர் நேரில் விசாரணை

13th Sep 2019 07:56 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தையின் தொடையில்  ஊசி உடைந்து சிக்கியது குறித்து கோவை சுகாதாரத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணா மருத்துவமனையில் 2 மணி நேரம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார். 
மேட்டுப்பாளையம், எம்.எஸ்.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (28). செல்லிடப்பேசி உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி மலர்விழி (26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மலர்விழி பிரசவத்துக்காக கடந்த 19ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு 21ஆம் தேதி இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதைதொடர்ந்து 21ஆம் தேதி மருத்துவமனையில் குழந்தையின் இடது கை, தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. அப்போது  ஊசியின் பாதி முனை உடைந்து தொடையிலேயே சிக்கியது. ஊசி போட்ட செவிலியர் இதைப் பார்க்காமல் அப்படியே குழந்தையை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர். அப்போது, ஊசி போட்டதால் குழந்தை வலியில் அழுவதாகவும், வேறு எந்த பிரச்னையும் இல்லை என்று அவர்கள் கூறியதாகத் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து மலர்விழியையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். மறுநாள் காலை மலர்விழியின் தாய் தேன்மொழி குழந்தையை குளிக்க வைக்கும்போது தொடைப் பகுதியில் ரத்தம் கட்டி கூர்மையாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது தேன்மொழி லாவகமாக ஊசியை தனது கைகளால் பிதுக்கி எடுத்துள்ளார். இதனைப் பார்த்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்து மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள், செவிவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பணியில் இருந்த மருத்துவரும், செவிலியரும் அலட்சியமாகச் செயல்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 
இந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புதன்கிழமை புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கோவை சுகாதாரத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணா தலைமையில் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதுநிலை குழந்தைகள் நல மருத்துவர் ரங்கராஜ், பொள்ளாச்சி தலைமை மருத்துவமனை தலைமை மகப்பேறு மருத்துவர் வாணி ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் பெற்றோரிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். தொடர்ந்து அன்று பணியில் இருந்த அரசு மருத்துவர், செவிலியரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT