கோயம்புத்தூர்

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் மஞ்சள் ஒட்டுப்பொறி

10th Sep 2019 11:09 AM

ADVERTISEMENT

மஞ்சள் ஒட்டுப்பொறிகளைப் பயன்படுத்துவதன் மூலம் தென்னையில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வட்டாரங்களில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் வேகமாக பரவி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கிணத்துக்கடவு வட்டராத்துக்கு உள்பட்ட சொக்கனூர், வடபுதூர், பொட்டையாண்டிபுரம் ஆகிய கிராமங்களில் வேளாண்மைத் துறை சார்பில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வேளாண் இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி  தலைமை வகித்து பேசுகையில்,  பருவநிலை மாறுபாடுகளால் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்படுகிறது. இதனை இயற்கை வழிமுறைகள் மூலம் மட்டுமே முழுமையாக கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக வெள்ளை ஈக்களை எளிதாக கவர்ந்து இழுக்கும் மஞ்சள் ஒட்டுப்பொறிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இதனை ஏக்கருக்கு 5 என்ற வீதத்தில் தோட்டங்களில் கட்டித் தொங்கவிட வேண்டும். ஒட்டுப்பொறியில் ஈக்கள் ஒட்டிக் கொள்வதற்காக விளக்கெண்ணெய் தடவப்பட்டிருக்கும். மஞ்சள் நிறத்தால் ஈர்க்கப்படும் வெள்ளை ஈக்கள் ஒட்டுப்பொறியில் தடவப்பட்டுள்ள விளக்கெண்ணெயில் ஒட்டிக் கொண்டு வெளியேற முடியாது. இதேபோல், தாய் அந்துப்பூச்சிகள் அழிக்கப்படுவதால் இனப்பெருக்கம் குறைந்து தாக்குதலும் குறையும். தவிர, என்கார்சியா ஒட்டுண்ணிகள் மற்றும் இரைவிழுங்கிகளைப் பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். கட்டாயம் இயற்கை வழிமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.  வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை ஓலைகளில் படிந்துள்ள பூஞ்ஞாணத்தை அகற்ற மைதாக் கரைசலை தெளிக்கலாம் என்றார்.
கூட்டத்தில் வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயராஜ் நெல்சன், கிணத்துக்கடவு வட்டார வேளாண் உதவி இயக்குநர் தமிழ்செல்வி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT