கோயம்புத்தூர்

அடர் தீவனங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி விவசாயிகள் சங்கம் மனு

10th Sep 2019 11:05 AM

ADVERTISEMENT

அடர் தீவனங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனையை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் த.ராமதுரை முருகன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவர் சு.பழனிசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
விவசாயிகளின் உபத்தொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. நிலம் இல்லாதவர்கள் கூட கால்நடைகள் வளர்ப்பு மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆனால், தீவனங்கள் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்னைகளால் கால்நடைகள் வளர்ப்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர்த்தி தமிழக அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. 
பால் கொள்முதல் விலையை காரணம் காட்டி தனியார் விற்பனை நிலையங்களில் அடர் தீவனங்களின் விலையை திடீரென உயர்த்தியுள்ளனர். ஏற்கெனவே பால் உற்பத்தியில் போதிய வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தீவனங்களின் விலை உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பால் கொள்முதல் விலை உயர்வு அறிவிப்புக்கு முன் கடலை புண்ணாக்கு 50 கிலோ மூட்டை ரூ.1,750க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ரூ.2 ஆயிரத்து 250க்கு விற்கப்படுகிறது. ரூ.1,800க்கு விற்கப்பட்ட 60 கிலோ மூட்டை பருத்தி விதை ரூ.2 ஆயிரத்து 170க்கும், ரூ,1,400க்கு விற்கப்பட்ட 40 கிலோ மக்காச்சோளம் மாவு மூட்டை ரூ.1,560க்கும், ரூ.600க்கு விற்கப்பட்ட 50 கிலோ நெல் தவிடு மூட்டை ரூ.680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தவிர, கோதுமை மாவு, பட்டாணி குருணை உள்பட அனைத்து அடர் தீவனங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன. 
சராசரியாக மூட்டை ரூ.100 முதல் ரூ.500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அடர் தீவனங்களின் திடீர் விலை உயர்வு கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. எனவே, திடீர் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நவடிக்கை எடுக்கவும், ஆவின் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனையை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கூடுதல் கட்டணம் வசூல்:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச் செயலாளர்ஆர்.நாராயணன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, மேட்டுப்பாளையம் சாலையில் அண்ணா தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குச் சொந்தமான சந்தை குத்தகைக்கு விடப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில், குத்தகைதாரர்கள் சந்தையில் உள்ள வியாபாரிகளிடம் கடைகளுக்கு மின்சாரம் வழங்க ஒரு பல்புக்கு தினசரி ரூ.10 வீதம் வசூலிக்கின்றனர்.
மாநகராட்சியால் அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் கட்டாய வாகனக் கட்டணம் வசூலித்தல், தரைக் கடைகளுக்கு ரூ.20, மேடை கடைகளுக்கு ரூ.25 என கூடுதலாக வாடகை வசூலிக்கப்படுகிறது. சந்தைக்குள் நுழையும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் குத்தகைதாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் பணம் வசூலிப்பது, மேட்டுப்பாளைம் உழவர் சந்தையில் அதிகரித்து வரும் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT