கோயம்புத்தூர்

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்: தொண்டாமுத்தூர், காரமடை வட்டாரங்கள் தேர்வு

7th Sep 2019 06:50 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் தொண்டாமுத்தூர், காரமடை வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு தலா 100 ஹெக்டேர் பரப்பளவு வீதம் 200 ஹெக்டேரில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையின் கீழ் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய வேளாண்மை இயக்கம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. 
இந்நிலையில் விவசாயத்துடன் கால்நடைகள் வளர்ப்பு, கோழி வளர்ப்பு உள்ளிட்டவற்றையும் ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற புதிய திட்டத்தை வேளாண் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: 
வேளாண் துறையின் கீழ் நடப்பாண்டு ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் சாகுபடியுடன் கால்நடைகள் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, இயற்கை உரங்கள் உற்பத்தி, பலவகை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இந்தத் திட்டம் மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், காரமடை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்த உள்ளது. 
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் இறவைப் பயிர்களுக்கும், காரமடை வட்டாரத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மானியம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இரண்டு வட்டாரங்களிலும் தலா 100 ஹெக்டேர் வீதம் 200 ஹெக்டேரில் இந்தத் திட்டத்தை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஹெக்கடேருக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். வேளாண், கால்நடை , தோட்டக்கலை உள்பட துறைகள் இணைந்து திட்டம் செயல்படுத்தப்படும். 
கால்நடைகள், கோழிகளுக்கு கால்நடைத் துறை சார்பில் மானியம் வழங்கப்படும். மானியம் பணமாகவும், இடுபொருள்களாகவும் வழங்கப்படும். தற்போது இத்திட்டத்தில் விவசாயிகள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் தொடர்புகொள்ளலாம் என்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT