கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: பெண் உள்பட 4 பேர் கைது

4th Sep 2019 08:37 AM

ADVERTISEMENT

சூலூர் அருகே காங்கேயம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் பெண் உள்பட 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சூலூரை அடுத்த காங்கேயம்பாளையம், அன்னலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (32). கோயில் பூசாரியான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். மாலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டினுள் பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் தங்கராஜ் உத்தரவின்பேரில் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
 இந்நிலையில் சூலூரை அடுத்த செங்கத்துறை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை சூலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
 இதில் அவர்கள் திருப்பூர் மாவட்டம், திருவள்ளுவர் தோட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (29), அவரது மனைவி தேவி (27), தேவியின் தம்பி மணிகண்டன் (22), திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (27) ஆகியோர் என்பதும், இவர்களுக்கு காங்கேயம்பாளையம் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ. 12 ஆயிரம், இருசக்கர வாகனம், கவரிங் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT