கோயம்புத்தூர்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்: குனியமுத்தூர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்

4th Sep 2019 08:39 AM

ADVERTISEMENT

கோவையில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெறுவதை முன்னிட்டு குனியமுத்தூர் பகுதியில் புதன்கிழமை தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, பாரத் சேனா, அனுமன் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் புதன்கிழமை (செப்டம்பர் 4) பிற்பகல் 1 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோயிலில் இருந்து புறப்பட்டு குனியமுத்தூர் - பாலக்காடு சாலை வழியாகச் சென்று குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்பட உள்ளன. இதேபோல பிற்பகல் 2 மணிக்கு போத்தனூர் சாரதா மில் சாலையில் தொடங்கி சங்கம் வீதியில் ஒன்றுகூடி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி சாலையில் சென்று குறிச்சி குளத்தில் கரைக்கப்பட உள்ளன. இதனால் இந்த வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு புதன்கிழமை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பகல் 1 மணி முதல் பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கோவைப்புதூர் பிரிவில் இருந்து இடதுபுறம் திரும்பி குளத்துப்பாளையம் வழியாக ஆஸ்ரம் பள்ளி சந்திப்பு வந்து வலது புறம் திரும்பி புட்டுவிக்கி சாலை வழியாக உக்கடம் வந்து செல்லலாம். 
பகல் 2 மணிக்கு உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லக்கூடிய வாகனங்கள் குறிச்சி பிரிவில் இருந்து போத்தனூர் கடைவீதி, ரயில் திருமண மண்டபம், போத்தனூர் புதுப்பாலம், ஜீ.டி.டேங்க், செட்டிபாளையம் சாலை வழியாகச் சென்று பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்குச் செல்லலாம். 
பகல் 1 மணி முதல் உக்கடத்தில் இருந்து குனியமுத்தூர் மற்றும் பாலக்காடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் சாலை, சேதுமாவாய்க்கால் செக்போஸ்ட் வழியாக புட்டுவிக்கி சாலை வையாபுரி பள்ளி சந்திப்பில் இடதுபுறம் திரும்பாமல் நேராக கோவைப்புதூர் ஆஸ்ரம் பள்ளி சந்திப்பு சென்று குளத்துப்பாளையம் வழியாகச் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.  பொள்ளாச்சி சாலையில் இருந்து சுந்தராபுரம் வழியாக பாலக்காடு சாலை செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் எல் அன்ட் டி பைபாஸ் சாலை வழியாக வந்து மதுக்கரை மார்க்கெட் சாலை வழியாக வந்து பிள்ளையார்புரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சுகுணாபுரம் வந்து பாலக்காடு சாலையை அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். 
பொள்ளாச்சி சாலையில் இருந்து சுந்தராபுரம் வழியாக உக்கடம் செல்லும் இலகு ரக வாகனங்கள் ஈச்சனாரி பிரிவில் இருந்து வலது பக்கம் திரும்பி ஈச்சனாரி செட்டிபாளையம் சாலையை அடைந்து இடதுபுறம் திரும்பி ஜி.டி.டேங்க், போத்தனூர் புதுபாலம் வழியாக போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்ல வேண்டும். 
பொள்ளாச்சியில் இருந்து கோவை மார்க்கமாக வரும் லாரிகள் மற்றும் சரக்கு கனரக வாகனங்கள் நகருக்குள் செல்ல அனுமதியில்லை. அவை அனைத்தும் எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் செல்ல வேண்டும். மேற்கூறிய வழித்தடங்கள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல இருப்பதால் அவ்வழியில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களை இடையூறாக நிறுத்தாமல் ஒத்துழைக்க வேண்டும் என்று மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இரு நாள்களில் 113 சிலைகள் கரைப்பு
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கோவை மாநகரில் பல்வேறு இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் 395 சிலைகளும், புறநகர் பகுதியில் ஆயிரத்து 564 சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. கோவையில் கடந்த வாரம் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் சிலைகள் அனைத்துக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. 
 இந்நிலையில் கோவை மாநகரில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் திங்கள்கிழமை முதல் கோவையில் உள்ள சிங்காநல்லூர், குறிச்சி, உக்கடம், முத்தண்ணன் குளங்களில் கரைக்கப்பட்டன. திங்கள்கிழமையன்று மூன்று சிலைகளும், செவ்வாய்க்கிழமையன்று 110 சிலைகளும் கரைக்கப்பட்டன. இதில் செவ்வாய்க்கிழமையன்று சிங்காநல்லூர் குளத்தில் 4 சிலைகளும், குறிச்சி குளத்தில் 69 சிலைகளும், குனியமுத்தூர் குளத்தில் 33 சிலைகளும், முத்தண்ணன் குளத்தில் நான்கு சிலைகளும் கரைக்கப்பட்டன. 
புதன்கிழமையன்று சிங்காநல்லூர் குளத்தில் 32 சிலைகளும், சூலூர் குளத்தில் 3 சிலைகளும், வெள்ளக்கிணறு குளத்தில் 12 சிலைகளும், செங்குளத்தில் 5 சிலைகளும், வாளையாறு அணையில் ஒரு சிலையும் கரைக்கப்பட உள்ளன.
இதேபோல வியாழக்கிழமையன்று உக்கடம் பெரியகுளத்திலும், வெள்ளிக்கிழமையன்று முத்தண்ணன் குளம், செங்குளத்திலும், ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 8) மேட்டுப்பாளையம் ஆறு, செப்டம்பர் 23ஆம் தேதியன்று முத்தண்ணன் குளத்திலும் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT