கோயம்புத்தூர்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

4th Sep 2019 08:37 AM

ADVERTISEMENT

ஆகஸ்ட் மாத ஊதியத்தை வழங்கக் கோரி கோவையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 மத்திய பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான மாத ஊதியம் மாத கடைசி தேதியில் வங்கி மூலம் செலுத்தப்படும். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த மாதத்துக்கான ஊதியம் இதுவரையிலும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலர் சி.ராஜேந்திரன், பொருளாளர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
 அவர்கள் பேசும்போது, பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்கப்படாதது இந்த ஆண்டில் இது மூன்றாவது முறையாகும். ஆகஸ்ட் மாத ஊதியத்தை இதுவரை வழங்காத நிர்வாகம், ஊதியம் எப்போது கிடைக்கும் என்பதையும் தெரிவிக்கவில்லை. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பொதுத் துறை நிறுவனத்தை அழிக்கும் போக்கில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவகிறது என்று குற்றஞ்சாட்டினர். சங்க நிர்வாகி கருப்புசாமி உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT