கோயம்புத்தூர்

பள்ளிகளில் தூய்மைப் பணி மந்தம்:மாநகராட்சி மீது புகார்

4th Sep 2019 08:43 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தூய்மைப் பணி மந்தமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஊழியர்கள் மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 83 பள்ளிகள் இயங்கி வருகின்றன. 20 ஆயிரத்துக்கும் அதிகமான 
 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 800 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சிப் பள்ளி  வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சித் தொழிலாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். 
துப்புரவுத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பல பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மெத்தனமாக நடைபெறுவதாகவும், பள்ளிகளைச் சுத்தம் செய்ய கூடுதலாக துப்புரவுத் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும்  என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சி சுகாதாரத் துறை மூலமாக கூடுதல் துப்புரவுத் தொழிலாளர்களை நியமித்து வாரந்தோறும் ஒரு மாநகராட்சிப் பள்ளியில் "மாஸ் கிளீனிங்' எனப்படும் தூய்மைப் பணிகளில் ஈடுபட  வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார். 
அதைத் தொடர்ந்து, வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும், மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில்தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதில், மாநகராட்சிப் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில்  உள்ள குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் தேங்கிடாமல் தடுத்தல், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரம் செய்தல்,  பள்ளி கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளில் பலவற்றில் வாரந்தோறும் நடைபெற்ற வேண்டிய தூய்மைப் பணி, 2 வாரத்திற்கு ஒருமுறையும், சில பள்ளிகளில் மாதம் ஒரு முறை மட்டுமே நடைபெறுவதாகவும், பல பள்ளிகளில், குறைவான ஊழியர்களே தூய்மைப் பணிகளில் ஈடுபடுவதால் அங்கு முழுமையாகத் தூய்மைப் பணிகள் நடைபெறுவதில்லை என்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து, மாநகராட்சி சுகாதார அலுவலர் ஒருவர் கூறுகையில், வாரந்தோறும் பள்ளிகளில் தூய்மைப்பணிகள் நடைபெறுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. புகார் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT