கோயம்புத்தூர்

பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு: கிலோவுக்கு ரூ. 20 விலை உயர்வு

4th Sep 2019 08:36 AM

ADVERTISEMENT

கோவை, பட்டுக்கூடு கொள்முதல் மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,354 கிலோ கூடுகள் வரத்து இருந்தது. கிலோவுக்கு ரூ. 20 வரை விலை அதிகரித்தது.  
கோவை, பாலசுந்தரம் சாலையில் பட்டுவளர்ச்சித் துறையின் கீழ் அரசு பட்டுக்கூடு கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்ட விவசாயிகள் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 5 நாள்களும் பட்டுக்கூடுகள் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் சர்வோதயா சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் வியாபாரிகள் பங்கேற்று பட்டுக்கூடுகளை ஏலத்தில் எடுத்து செல்கின்றனர்.
பட்டுக்கூடு கொள்முதல் மையம் சார்பில் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் கோரப்படுகிறது. விவசாயிகளுக்கு ஒத்துவரும் விலை கிடைக்கும்போது விற்பனை செய்கின்றனர். அதன்படி வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கூடுகள் வரத்து அதிகரித்திருந்தது. விலையும் கடந்த வாரத்தைக்காட்டிலும் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 
இதுகுறித்து பட்டுக்கூடு கொள்முதல் மைய அலுவலர் சரவணன் கூறியதாவது:
கோவையில் கடந்த மாதம் பெய்த மழையின் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே கூடுகள் வரத்து குறைவாக இருந்து வந்தது. தற்போது மழை குறைந்ததால் மீண்டும் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை 1,354 கிலோ வரத்து இருந்தது. விலையும் கடந்த வாரத்தைக் காட்டிலும் கிலோவுக்கு ரூ. 20 வரை கூடுதலாக கிடைத்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ. 410 சென்ற நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 430 வரை சென்றது. சராசரியாக ரு. 395 கிடைத்து வந்தது. 
மழையின் தாக்கம் குறைந்ததால் கூடுகளும் பாதிக்கப்படாமல் தரமாக இருப்பதால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விலை கிடைத்து வருகிறது. கூடுகளுக்கான பணம் ஆன்லைன் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT