கோயம்புத்தூர்

தென்னையில் மீண்டும் பரவுகிறது வெள்ளை ஈ தாக்குதல்: கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறல்

4th Sep 2019 08:41 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் தென்னை மரங்களில் மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல் வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். 
கோவை மாவட்டத்தில் 92 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி உள்ளது. குறிப்பாக, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை வட்டாரங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை சாகுபடியை ஆதாரமாகக் கொண்டு கொப்பரை, தென்னை நார், கயிறு உள்பட பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல கோடி ரூபாய்க்கு வர்த்தம் செய்யப்படுகிறது. 
கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது.  ஆனைமலை வட்டாரத்தில் பரவத் தொடங்கிய வெள்ளை ஈ தாக்குதல் மாவட்டம் முழுவதும் வேகமாகப் பரவி பெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்தனர். இதனால் தென்னை மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கும் மகசூல் இழப்பு ஏற்பட்டது. 2 ஆண்டு காலம் வரையிலும் கடும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளை ஈ பாதிப்பு கடந்த ஆண்டு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வட்டாரங்களில் மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல் வேகமாகப் பரவி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றியும் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். கடந்த காலம் போல பெரும் சேதத்தை ஏற்படுத்துவதற்கு முன் வேளாண்மைத் துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு வட்டாரம், சொக்கனூரைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது: 
கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வட்டாரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சி, வெள்ளை ஈ பாதிப்புகளில் இருந்து மெல்ல மரங்கள் மீண்டு வரும் நிலையில், மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல் பரவி வருவது விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
தென்னை மரங்களின் ஓலைகளில் ஒட்டிக்கொள்ளும்  வெள்ளை ஈக்கள் அதன் சாற்றை உறிஞ்சி ஒளிச்சேர்க்கை நடைபெறுவதை தடை செய்கின்றன. பின் ஓலைகளின் மேல்பகுதில் கருப்பு நிறத்தில் பூஞ்சாணம் போல் படர்கின்றன. இதனால் மரங்களுக்குத் தேவையான உணவு கிடைக்காமல் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் மரங்கள் உறுதித்தன்மையை இழந்து அழியும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. 
50 ஆண்டு காலம் மகசூல் கொடுக்கக்கூடிய மரங்கள் நோய் பாதிப்பினால் அழிவதால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வரையிலும் வருவாய் இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வெள்ளை ஈ தாக்குதல்கள் குட்டை - நெட்டை, நெட்டை - குட்டை ஆகிய வீரிய ஒட்டுரக மரங்களில்தான் அதிக அளவில் காணப்படுகின்றன. கிணத்துக்கடவு, பொள்ளாச்சிப் பகுதிகளில் 40 சதவீத மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய்த் தாக்குதல் அதிகரிக்கும் முன் கட்டுப்படுத்த வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி கூறியதாவது: 
பருவநிலை மாற்றத்தால்தான் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்படுகிறது. கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் வெயில், மழை என காலநிலை மாறுவதால் வெள்ளை ஈ தாக்குதல் மீண்டும் பரவி வருகிறது. கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய வட்டாரங்களில் காலநிலை மாற்றத்தாலே வெள்ளை ஈ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மரங்கள் அழிவதற்கு வாய்ப்பில்லை. இதனை இயற்கை வழிமுறைகளால் மட்டுமே முழுமையாகக் கட்டுப்படுத்த முடியம். தவிர தொடர் மழை பெய்தாலும் வெள்ளை ஈ தாக்குதல் குறைய வாய்ப்புள்ளது. 
முதல்கட்டமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு, கட்டுப்பாடு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT