கோயம்புத்தூர்

சிறுத்தை தாக்கியதில் 2 ஆடுகள் பலி: கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தல்

4th Sep 2019 08:44 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம் அருகே பணப்பாளையம் புதூர் கிராமத்தில் சிறுத்தை தாக்கி 2 ஆடுகள் பலியாயின. இதனால் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பணப்பாளையம் புதூர், பொம்மநாயக்கன்பாளையம், பாரப்பள்ளம், வாசதேவன்நாயக்கன் தோட்டம்,  கண்டியூர் உள்ளிட்ட கிராமங்கள் அடர்ந்து வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இந்த வனப் பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியே வரும் யானை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய  நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதோடு, விளை நிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கண்டியூர் பிரிவு, பணப்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சர்தார் பாஷா மகன் ஷாஜஹான். இவர் தான் வளர்த்து வந்த ஆட்டை வீட்டின் வாசலில் இருந்த கொட்டகையில் ஞாயிற்றுக்கிழமை கட்டியிருந்தார். அப்போது இரவு நேரத்தில் அங்கு வந்த சிறுத்தை, ஆட்டின் கழுத்தை கடித்துக் குதறி கொன்றுள்ளது. இதைப் பார்த்து அப்பகுதியில் இருந்து தெருநாய்கள் குலைத்ததால் சிறுத்தை அங்கிருந்து தப்பித்துச் சென்றது. காலை வந்து பார்த்தபோது சிறுத்தை, ஆட்டைக் கடித்துக் கொன்றது தெரிந்தது.
இதையடுத்து காரமடை வனவர் சுரேஷ், வனக் காப்பாளர் முனுசாமி மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆட்டின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கிராம மக்கள் குவிந்தனர். அப்போது வனத் துறையினரிடம் பார்வதி என்பவர், தான் வளர்த்து வந்த 10 ஆடுகளை திங்கள்கிழமை மேய்ச்சலுக்கு அருகில் உள்ள விளை நிலத்தில் விட்டபோது அங்கு வந்த  சிறுத்தை ஆட்டை கடித்துக் கொன்றதாகத் தெரிவித்தார்.
ஒரு நாளில் சிறுத்தை தாக்கி 2  ஆடுகள் உயிரிழந்ததால் அப்பகுதியில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என வனத் துறையினரிடம் கிராம மக்கள் வலியுறுத்தினர்.  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT