கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனையில்  குறைகளைத் தெரிவிக்க புகார்ப் பெட்டிகள்: 7 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன

4th Sep 2019 08:39 AM

ADVERTISEMENT

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை குறைபாடுகள், முறைகேடுகள் தொடர்பாக நோயாளிகள், பொதுமக்கள் புகார் மனு அளிக்க மருத்துவமனை வளாகத்தில் 7 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதயம், புற்றுநோய், விபத்து மற்றும் முடநீக்கியல் உள்பட 20க்கும் அதிகமான பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் 7 ஆயிரம் புறநோயாளிகளும், 1,500 உள் நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். 
இங்கு, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை, மகப்பேறு, உடல்கூறாய்வு உள்பட பல்வேறு பிரிவுகளில்  சிகிச்சைக்கு பணம் வசூலித்தல் உள்பட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்து வந்தது. நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் யாரிடம் மனுகொடுக்க வேண்டும் எனத் தெரியாமலே அல்லாடி வந்தனர். 
இந்நிலையில் பொதுமக்கள், நோயாளிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் புகார்ப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள், நோயாளிகள் சிகிச்சைகள், முறைகேடுகள் குறித்த புகார்களை மனுவாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூ.அசோகன் கூறியதாவது:
 மருத்துவமனையில் உள்ள பிரச்னைகள் குறித்து நோயாளிகள், பொதுமக்களிடம் கேட்பதற்கு எப்போதும் அதிகாரிகளால் தயார் நிலையில் இருக்க முடியாத சூழல் காணப்படுகிறது. இதனால் புகார் தெரிவிக்க வருபவர்களும் தங்களது பிரச்னைகளை தெரிவிக்க இயலாத நிலை இருந்து வருகிறது. 
இந்நிலையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து மனுவாக புகார் அளிக்கும் வகையில் புகார்ப் பெட்டிகள் வைக்க திட்டமிடப்பட்டு 7 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த புகார் பெட்டிகளில் பெறப்படும் மனுக்களுக்கு வாரம்தோறும் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மக்களும்  புகார் அளிக்க அதிகாரிகளை சந்திப்பதற்காக காத்திருக்க வேண்டியதில்லை என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT