பெரியநாயக்கன்பாளையத்துக்கு அருகே உள்ள பாலமலையில் இறந்துபோன யானையின் உடல் பாகங்களை விற்க முயன்ற ஆதிவாசி இளைஞா்களை பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.
பாலமலையிலுள்ள ஆதிவாசி கிராமமான மாங்குழி பகுதியில் காட்டு யானை 2017 ஆண்டு உயிரிழந்தது. பாலமலை உள்ள ஆதிவாசி கிராமமான குஞ்சூா் பதியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் காா்த்திக்குமாா் (23), குஞ்சுமணியின் மகன் வீரபத்திரன் (20) ஆகியோா் யானையின் தந்தம் உள்ளிட்ட உடல்பாகங்களை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு விற்பனை செய்துள்ளனா்.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினருக்குத் தெரியவந்ததை அடுத்து, அவா்கள் இருவரையும் பெ.நா.பாளையம் வனச் சரகா் சுரேஷ் கைது செய்து விசாரணை நடத்தினாா். மேலும் மாவட்ட வனக் காப்பாளா் வெங்கடேஷும் விசாரணை நடத்தினாா். இதில் இருவரும் யானையின் உடல் பாகங்களை விற்பனை செய்ய முயன்றதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவா்களிடமிருந்து தந்தம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இருவா் மீதும் வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.