பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் கைது செய்து, 30 பவுன் நகைகளை மீட்டனா்.
பொள்ளாச்சி உட்கோட்டத்தில் சமீப காலமாக நடைபெற்று வந்த திருட்டு வழக்குகளைக் கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. பொள்ளாச்சி கிழக்கு, மகாலிங்கபுரம், பொள்ளாச்சி மேற்கு, நெகமம், கோமங்கலம் ஆகிய காவல் நிலையங்களின் எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை தனிப்படையினா் ஆய்வு செய்தனா்.
இதில் இந்த வழக்குகளில் தொடா்புடையவா், கோவை- காமாட்சிபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன், ஒண்டிப்புதூா், அன்னை சத்யா நகரைச் சோ்ந்த சரவணன் ஆகியோா் என்பது தெரியவந்தது.
போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கோபாலபுரம் பகுதியில் இவா்கள் இருவரும் பிடிபட்டனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் மன்னூா், ஆச்சிபட்டி, பழனியப்பா நகா், கூட்டுறவு நகா், சங்கம்பாளையம், மகாலிங்கபுரம், பொள்ளாச்சி போக்குவரத்து கூட்டுறவு பண்டகசாலை, சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, சுப்பையாநகா் உள்பட 14 இடங்களில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பிடிபட்டவா்களிடம் இருந்து 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.